Tuesday, September 12, 2017

சத்ரு சங்கார வேல் பதிகம் / Shatru Samhara Vel Pathigam


தடங்கல்கள் நீங்க இந்த ஸ்லோகம் சொல்வது நல்லது.

************

சத்ரு சங்கார வேல் பதிகம்


************************************


ஸ்ரீ கணேசாய நம :

ஸ்ரீ குமார குருதாஸ சுவாமிநே  நம:


காப்பு


சண்முகக் கடவுள் போற்றி ! சரவணத்(து) உதித்தோய் போற்றி!

கண்மணி முருகா போற்றி ! கார்த்திகை பாலா போற்றி!

தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !

விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி ! போற்றி !!


நூல்


அப்பமுடன் அதிரசம் பொரிகடலை துவரை வடை

அமுது செய் இபமுகவனும்

ஆதிகேசவன் இலட்சுமி திங்கள் தினகரன்

அயிராவதம் வாழ்கவே !

முப்பத்து முக்கோடி வானவர்கள் இடர்தீர

முழுது பொன்னுலகம் வாழ்க!

மூவரொடு கருட கந்தருவர் கிம்புருடரும்

முதுமறைக் கிழவர் வாழ்க !

செப்பரிய இந்திரன் தேவி அயிராணிதன்  

திருமங்கலம் வாழ்கவே !

சித்த வித்யாதரர் கின்னரர்கள் கனமான

தேவதைகள் முழுதும் வாழ்க !

சப்தகலை விந்துக்கும் ஆதியாம் அதிரூப

சரஹணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்

சத்ரு சங்கார வேலே. (1) 


சித்தி சுந்தரி கெளரி அம்பிகை க்ருபாநிதி

சிதம்பரி சுதந்தரி பர

சிற்பரி சுமங்கலி நிதம்பரி விடம்பரி

சிலாசுதை விலாச விமலி

குத்து திரிசூலி திரிகோணத்தி ஷட்கோண

குமரி கங்காளி ருத்ரி

குலிச ஓங்காரி ஹ்ரீங்காரி ஹாங்காரி ஹூங்

காரி ஈம்காரி அம்மா!

முத்தி காந்தாமணி முக்குண துரந்தரி

மூவர்க்கும் முதல்வி ஞான

முதுமறைக் கலைவாணி அற்புத புராதனி

மூவுலகுமான ஜோதி

சக்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும்

சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்

சத்ரு சங்கார வேலே. (2)


மூரியுள முப்பத்து முக்கோடி தேவரும்

முனிவரொடும் அசுரர் கூடி

முழுமந்த்ர கிரிதன்னை மத்தாகவே செய்து

முற்கணத்(து) அமுது பெறவே

கோரமுள வாசுகியின் ஆயிரம் பகுவாயில்

கொப்பளிதிடு விடங்கள்

கோளகையும் அண்டங்கள் யாவையும் எரித்திடும்

கொடிய அரவினைப் பிடித்து

வீரமுடன் வாயினால் குத்தி உதிரம் பரவ

இரு தாளிலே மிதித்து

விரித்துக் கொழுஞ்சிற(கு) அடித்தே எடுத்(து)  உதறும்

விதமான தோகைமயிலில்

சாரியாய்த் தினம் ஏறி விளையாடி வரு முருக

சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும் 

சத்ரு சங்கார வேலே. (3)


உக்ரமுள தாருகன் சிங்கமுக சூரனும்

உன்னுதற்(கு) அரிய சூரன்

உத்திகொளும் அக்னிமுகன்  பானுகோபன் முதல்

உத்தண்ட அசுரர் முடிகள்

நெக்குவிடக் கரி புரவி தேர்கள் வெள்ளம் கோடி

நெடிய பாதங்கள் கோடி

நிறையிலா அஸ்திரம் வெகு கோடிகள் குருதி

நீரில் சுழன்று உழலவே

தொக்கு தொகு தித்தி திமி டுண்டு டுடு டகுகு டிகு

துந்து திமி டங்கு குகு டிங்கு குகு சங்கு கென

தொந்தக் கவந்தம் ஆட

சக்ரமொடு சக்திவிடு தணிகை சென்னியில் வாழும்

சரஹணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்

சத்ரு சங்கார வேலே. (4)

    

  

அந்தியிற் பேய் உச்சியுறு  முனி காட்டேரி

அடங்காத பகல் இருசியும்

அகோர கண்டங் கோர கண்ட சூனியம் பில்லி

அஷ்டமோகினி பூதமும்

சந்தியா நவ குட்டிசாத்தி வேதாளமும்

சாகிநி டாகிநிகளும்

சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி முதல்

சஞ்சரித்திடு முனிகளும்

சிந்தை நொந்(து) அலறி திருவெண்ணீறு காணவே

தீயிலிடு மெழுகு போலத்

தேகம் எல்லாம் கருகி நீறாகவே நின்று

சென்னி இரு தணிகை மலையில்

சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும்

சரஹணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடி வரும்

சத்ரு சங்கார வேலே. (5)    


கண்டவிட பித்தமும் வெப்பு தலைவலி இருமல்

காமாலை சூலை குஷ்டம்

கண்டமாலை தொடைவாழை வாய்ப் புற்றினொடு

கடினமாம் பெருவியாதி

அண்ட ஒணாத ஜுரம் சீதள வாத ஜுரம்

ஆறாத பிளவை குன்மம்

அடங்காத இருபக்து  மேகமுடன் நாலு லக்

கத்தில் எண்ணாயிரம் பேர்

கொண்ட பல நோய்களும் வேல் என்(று)  உரைத்திடக்

கோ என்ன ஓலமிட்டுக்

குலவு தினகரன் முனம் மஞ்சு போல் நீங்கிடும்

குருபரன் நீறணிந்து

சண்டமாருத கால உத்தண்ட கெம்பீர

சரஹணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்

சத்ரு சங்கார வேலே. (6) 


மகமேரு உதயகிரி அஸ்தகிரியும் சக்ர

வாளகிரி நிடதவிந்தம்

மா உக்ரதர நரசிம்மகிரி அத்திகிரி

மலைகளொடு மதனம் சுமவா

ஜெகமெடுத்திடு புட்ப தந்தம் ஐராவதம்

சீர்புண்டரீக குமுதம்

செப்பு சாருவபௌமம் அஞ்சனம் சுப்பிர

தீப வாமனாதி வா

சுகி மகாபதுமன் அனந்தன் கார்க்கோடகன்

சொற்சங்கபால குளிகன்

தூய தக்கன் பதும சேடனோடு அரவெலாம்

துடித்துப் பதைத்(து) அதிரவே

தக தகென நடனமிடும் மயிலேறி விளையாடு

சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரை குத்தி எதிராடிவிடும்

சத்ரு சங்கார வேலே. (7)


திங்கள் பிரமாதியரும் இந்த்ராதி தேவரும்

தினகரரும் முனிவரோடு

சித்ரபுத்திரர் மௌலி அகலாமல் இருபதம்

சேவித்து நின்று தொழவும்

மங்கை திருவாணியும் அயிராணியொடு சப்த

மாதர் இரு தாள் பணியவும்

மகாதேவர் செவி உறப் ப்ரணவம் உரைத்திட

மலர்ந்த  செவ்வாய்கள் ஆறும்

கொங்கை களபம் புனுகு ஜவ்வாது மண வள்ளி

குமரி தெய்வானையுடனே

கோதண்டபாணியும் நான்முகனுமே புகழ்

குலவு திருத்தணிகை மலைவாழ்

 பங்கயக்கர குமர

சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்

சத்ரு சங்கார வேலே. (8)  


மண்டலம் பதினாலு லோகமும் அசைந்திட

வாரிதி ஓர் எழும் வறள

வலிய  அசுரர் முடிகள் பொடிபடக் கிரவுஞ்சம்

மாரி  எழத் தூளியாக

கொண்டல் நிறம்  கொளும் அசுரர் அண்டங்கள்  எங்குமே

கூட்டமிட்(டு)  ஏக அன்னார்

குடல் கை கால் உடல் மூளை தலைகள் வெவ்வேறாகக்

குத்திப் பிளந்தெறிந்து

அண்டர் பணி கதிகாமம் பழநி சுப்பிரமணியம்

ஆவினன்குடி ஏரகம்

அருணாசலங் கயிலை தணிகைமலை மீதில் உறை

அறுமுகப் பரமகுருவாம்

சண்டமாருத கால சம்ஹார அதிதீர

சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்

சத்ரு சங்கார வேலே. (9)


மச்சம் குதித்து நவமணி தழுவ வந்தநதி

வையாபுரிப் பொய்கையும்

மதியை முத்தஞ்செயும் பொற்கோபுரத்(து)  ஒளியும்

வான்மேவு கோயிலழகும்

உச்சிதமான திருவாவினன் குடியில் வாழ்

உம்பர் இடர் முடி நாயகன்

உக்ரமயில்  ஏறிவரு முருக சரஹணபவன்

ஓங்கார சிற்சொருப வேள்

அச்சுத க்ருபாகரன் ஆனை   முறை செய்யவே

ஆழியை விடுத்(து) ஆனையை

அன்புடன் இரட்சித்த திருமால் முகுந்தன் எனும்

ஹரி கிருஷ்ண ராமன் மருகன்

சச்சிதானந்த பரரான ஈசுரர்தந்த 

சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்

சத்ரு சங்கார வேலே. (10)

********************************************************************************

No comments: